organic farming
அங்கக வேளாண்மை :: வெற்றிக்கதைகள்

ஒரு ஏக்கர் ரூ.1,00,000 ‘கமகம’ வருமானம் கொடுக்கும் கறிவேப்பிலை..!

பளிச் பளிச்…

  • ஏக்கருக்கு 4,600 கன்றுகள்.
  • மூன்று மாதத்துக்கு ஒரு அறுவடை
  • ஏக்கருக்கு 8 டன் மகசூல்

தமிழகத்தில் சமைக்கப்படும் பெரும்பாலான உணவுகளிலும் இடம்பெறும் ஒரு விளைபொருள் கறிவேப்பிலை! இதற்குக் காரணம்… அதிலுள்ள வாசனை மட்டுமல்ல, மருத்துவ குணமும்தான்! அதனால்தான் சந்தையில் கறிவேப்பிலைக்கு எப்போதும் மவுசு குறைவதேயில்லை. இதைச் சரியாகப் புரிந்து கொள்ளும் விவசாயிகள் பலரும் இதை சாகுபடி செய்யத் தவறுவதில்லை.

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் கறிவேப்பிலை கமகமக்கிறது. பெரும்பாலானோர் ரசாயன இடுபொருட்களைப் பயன்படுத்தி வந்தாலும், சிலர் இயற்கை வழி விவசாய முறையில் கறிவேப்பிலை சாகுபடியை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்… காரமடை, மங்கலக் கரைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார்.
கறிவேப்பிலை மணம் கலந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் குளிர்காற்று இதமாக வீசிக் கொணடிருந்த ஒரு காலை வேளையில் நந்தகுமாரின் தோட்டத்துக்குள் வலம் வந்தோம்.

“வஞ்சகமில்லாம வெளையுற வளமான 30 ஏக்கர் செம்மண் பூமி… பஞ்சமில்லாமல் பாசனத்துக்குத் தண்ணி கொடுக்கிற கிணறுக…அப்பறம் விவசாயம்  பாக்குறதுக்கு நமக்கு என்ன குறை இருக்கப்ப போகுது?” என்று சந்தோஷம் பொங்கச் சொன்னபடி நம்முடன் நடந்த நந்தகுமார், தொடர்ந்தார்.

“வாழை, மஞ்சள்னு நஞ்சை விவசாயம் இருந்தாலும், கறிவேப்பிலைதான் எனக்குப் பிரதான பயிர். அதனால்தான் ஏழு ஏக்கர்ல ‘செங்காம்பு’ங்கிற நாட்டு ரக கறிவேப்பிலையை நட்டிருக்கேன்.

பொதுவா, கறிவேப்பிலைச் செடியோட பசுமைக்கும் வாசனைக்கும் பூச்சிங்க அதிகமா வரும். அதனால வழக்கமா வருஷத்துல முப்பது தடவைக்கும் மேல ரசாயனப் பூச்சிக்கொல்லிகளை அடிப்பாங்க. வயலுக்குள்ள போனாலே கறிவேப்பிலை வாசத்தைவிட, பூச்சிக்கொல்லி வாசம்தான் தூக்கும். ‘சாப்பாட்டுல அதிகமா பயன்படுத்துறது கறிவேப்பிலை. பச்சையாகூட பலசமயங்கள்ல பயன்படுத்தறாங்க. அப்படிப்பட்ட இலைக்கு இப்படியெல்லாம் ரசாயனத்தைக் கொட்டுறது நியாயமா.. இயற்கையிலயே இதை விளைவிக்க முடியாதா?’னு எனக்கு அடிக்கடித் தோணும் இதுபத்தி நிறைய விவசாயிகள்ட்டகேட்டப்போ, ரசாயனத்தைப் பயன்படுத்தாம கறிவேப்பிலை சாகுபடி பண்ணவே முடியாது’னு தான் சொன்னாங்க.

செயற்கையை வென்ற இயற்கை!

அந்த சமயத்துலதான் முன்னோடி இயற்கை விவசாயி நவநீதகிருஷ்ணன் எனக்கு அறிமுகம் ஆனார். அவரு மூலமாதான் இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சிட்டேன். அதோட ‘பசுமை விகடன்’ மூலமாவும் பல தகவல்களைக் கத்துக்கிட்டேன். இயற்கையில நல்லபடியா கறிவேப்பிலையை விளைவிக்கறதை ஒரு சவாலாவே எடுத்துக்கிட்டு சாகுபடியில இறங்கினேன். அதுவரைக்கும் நான் கறிவேப்பிலை சாகுபடி பண்ணுனதேயில்லை. முதன் முதலாவே இயற்கையிலதான் ஆரம்பிச்சேன்.
முதல் கட்டமா ரெண்டு ஏக்கர் நிலத்துல நட்டேன். நல்ல மகசூல். அப்பறம்தான் ஏழு ஏக்கருக்கு விரிவுபடுத்தினேன். இப்போ ரெண்டு வருஷமா, பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, தொழுவுரம், வேப்பம் பிண்ணாக்கு, கொம்பு சாண உரம்னு இயற்கை இடுபொருட்களைத்தான் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன்.
கறிவேப்பிலையை அதிகமா தாக்குற இலைச்சுருட்டுப் புழுவையும், புள்ளிநோய், பூஞ்சணம், வேரழுகல் மாதிரியான எல்லா நோய்களையும் இயற்கை முறையிலதான் கட்டுப்படுத்துறேன். இதையெல்லாம் நேரடியா பார்த்துட்டு, ‘ரசாயனம் தெளிக்காம மகசூல் எடுக்கவே முடியாது’னு சவால் விட்டவங்கள்லாம் இப்ப கொஞ்சம் கொஞ்சமா இயற்கைக்கு மாறிக்கிட்டு இருக்காங்க”. என்று பெருமிதத்தோடு சொன்ன நந்தகுமார், இயற்கை முறையில் ஒரு ஏக்கர் நிலத்தில் கறிவேப்பிலைசாகுபடி செய்யும் முறைகளைப் பற்றி பாடமாகவே சொல்லத் தொடங்கினார்.

அனைத்துப் பட்டங்களுக்கும் ஏற்றது!

‘கறிவேப்பிலை, செம்மண் பூமியில் நன்கு வளரும். அனைத்துப் பட்டங்களிலும் இதை நடவு செய்யலாம். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, 15 டிராக்டர் தொழுவுரத்தை இறைத்து, நிலத்தில் கட்டிகள் இல்லாமல் மண் பொலபொலப்பாகும்படி இரண்டு உழவு செய்ய வேண்டும். பிறகு, ஓர் அடி உயரம், மூன்றரை அடி அகலத்தில் மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும். நிலத்தின் அமைப்பு, நமது வசதி ஆகியவற்றைப் பொறுத்து பாத்திகளின் நீளத்தை அமைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு பாத்திக்கும் இடையில் ஒன்றரை அடி இடைவெளி இருக்க வேண்டும். பாத்திகளின் மீது சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஏக்கருக்கு 4,600 நாற்று!

ராகி, சோளம், கம்பு, தினை, வரகு, சாமை, பாசிப்பயறு, எள், கொள்ளு, ஆகிய நவதானிய விதைகளை மொத்தமாக 20 கிலோ அளவில் கலந்து மேட்டுப்பாத்திகளின் மீது விதைத்து பாசனம் செய்ய வேண்டும். 40-ம் நாளுக்கு மேல் இந்தச் செடிகள் வளர்ந்து நிற்கும். அவற்றை வேரோடு பறித்து பாத்திகளின் மேல் போட்டு மண்ணால் மூடிவிட வேண்டும். அடுத்த ஒரு வாரத்துக்குள் பாத்திகளின் மையத்தில் இரண்டே முக்கால் அடி இடைவெளியில், அரையடி ஆழத்தில் குழியெடுத்து கறிவேப்பிலை நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 4,600 நாற்றுகள் தேவைப்படும்.

மாதம் ஒரு முறை பஞ்சகவ்யா!

பாசனத்தை 10 நாட்களுக்கு ஒரு முறை செய்தால் போதுமானது. சொட்டு நீர்ப்பாசனம் அமைத்தால் களைகள் வளர்வதில்லை. மாதம் ஒரு முறை 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து செடிகள் நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டும். இதனால் செடிகள் விரைவாக வளர்வதுடன், நல்ல நிறமும் கிடைக்கிறது. 100-ம் நாள் ஒவ்வொரு செடியின் வேர்ப்பகுதியிலும் 50 கிராம் வேப்பம்வபிண்ணாக்கை வைக்க வேண்டும்.

பூச்சிகளுக்கு மூலிகைப் பூச்சிவிரட்டி!

இலைச்சுருட்டுப் புழு, இலைப்புள்ளி நோய், பூஞ்சணம் மற்றும் பனிக் காலங்களில் ஏற்படும் வெண்புள்ளி நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்த, 15 நாட்களுகு்கு ஒரு முறை, 10 லிட்டர் தண்ணீருக்கு 400 மில்லி என்கிற கணக்கில் மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து, அதிகாலை நேரத்தில் தெளித்து வரவேண்டும். இதற்கு இவ்வளவுதான் தேவை என்ற கணக்கு இல்லை. செடிகள் முழுவதும் நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டியது அவசியம்.
மாதம்தோறும் பெளர்ணமி தினத்தன்று, 100 லிட்டர் தண்ணீரில் 40 கிராம் கொம்பு சாண உரத்தூளைக் கலந்து, ஒரு மணி நேரம் வைத்திருந்து, பனிப் புகைபோல தெளிக்க வேண்டும். இதைத் தெளிப்பதால் கறிவேப்பிலை அதிக நறுமணத்துடன் விளையும். அதிக நாட்கள் வாடாமலும் இருக்கும்.
நடவு செய்த 6-ம் மாதத்தில் முதல் அறுவடை செய்யலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையின்போது பெரிய அளவில் மகசூல் கிடைக்காது. தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மகசூல் அதிகரிக்கும்.

ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து!

முதல் ஆண்டில் 5 டன் முதல் 6 டன் வரை மகசூல் கிடைக்கும் இரண்டாம் ஆண்டில் இருந்து 8 டன் முதல் 10 டன் வரை மகசூல் கிடைக்கும். ஒவ்வொரு மூன்று அறுவடைகளுக்குப் பிறகும், தரையிலிருந்து ஒரு அடி உயரத்துக்கு மட்டும் இருக்குமாறு விட்டு, செடிகளை கவாத்து செய்ய வேண்டும். பிறகு, செடிகளுக்கிடையில் உள்ள இடைவெளியில் நவதானியங்களை விதைத்து, 40-ம் நாள் அவற்றை வேரோடு பறித்து மூடாக்காகப் போட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இப்படிச்செய்வதால் பயிருக்கு உரம் கிடைப்பதுடன், களைகளும் கட்டுப்படும்.

செலவைக் குறைக்கும் கேரள வியாபாரிகள்!
சாகுபடிப் பாடத்தை முடித்த நந்த குமார்

ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் கறிவேப்பிலை சாகுபடி செய்ய நந்தகுமார் சொல்லும் செலவூவரவு கணக்கு (ரூபாயில்)

விவரம் செலவு வரவு
உழவு 2,400  
தொழுவுரம் இறைப்பு 22,000  
மேட்டுப்பாத்தி 3,000  
நவதானிய விதைப்பு மூடாக்கு 1,200  
நாற்று,நடவுக்கூலி 10,750  
இடுபொருட்கள் தயாரிப்பு தெளிப்பு 4,500  
கொம்பு சாண உரம் 1,000  
வேப்பம்பிண்ணாக்கு 3,500  
கவாத்து 4,000  
8 டன் கறிவேப்பிலை மூலம் வரவு   1,60,000
மொத்தம் 52,350 1,60,000
நிகரலாபம்   1,07,850

குறிப்பு: சொட்டுநீர் அமைப்பு நிரந்தரச் செலவு என்பதால், இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை.
வருமானத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். “இயற்கை முறையில் சாகுபடி செய்யறப்போ முட்டுவளிச் செலவு குறையுறதோட, நல்ல மகசூலும் கிடைக்குது. கறிவேப்பிலை மறுதழைவுப் பயிர்ங்கறதால, ஒரு தடவை நடவு செஞ்சா…25 வருஷம் வரை மகசூல் கிடைக்கும். வருஷத்துக்கு நாலு தடவை அறுவடை செய்யலாம். மார்கழி மாசத்துல இருந்து மாசி மாதம் வரைக்கு கறிவேப்பிலைக்கு நல்ல விலை கிடைக்கும். எப்படியும் கிலோவுக்கு குறைந்தபட்சமா 4 ரூபாய் விலை கிடைக்சுடும். அதிகபட்சமா 40 ரூபாய்வரை கிடைக்கும்.

கேரளாவிலிருந்து வர்ற வியாபாரிகள், ஆளுங்கள வெச்சு அறுவடை செஞ்சு, எடை போட்டு எடுத்துக்கறாங்க. அறுவடைக்கூலி, போக்குவரத்து, கமிஷன், ஏத்துக்கூலி, இறக்குக்கூலினு எந்தச் செலவும் நமக்கு இல்லைங்கறதால…. அவங்களுக்குத்தான் நான் விலைக்குக் கொடுக்கிறேன். தோட்டத்துலயே கை மேல காசு கிடைச்சுடுது. எனக்கு சராசரி விலையா கிலோவுக்கு 20 ரூபாய் கிடைச்சுடுது. ஒரு வருஷத்துக்கு ஒரு ஏக்கர்ல குறைந்தபட்ச மகசூல் 8 டன் கறிவேப்பிலைனு வெச்சுக்கிட்டாலும்… 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபா வருமானம் சிடைச்சுடுது. இதில் செலவெல்லாம் போக 1 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது” என்றார் நந்தகுமார் மனநிறைவுடன்!.


தகவல்

திரு. நந்தகுமார்
விவசாயி,
காரமடை

 

Updated on : Oct 2014